×

பொது பாதைக்கு பட்டா கோரிய வழக்கு மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சென்னை: பொது பாதையாக பொதுமக்கள் பயன்படுத்தும் நிலம் தனக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்திற்கு பட்டா வழங்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில், மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதத்துடன், மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயனாவரம் தாலுகாவுக்கு உட்பட்ட கொளத்தூர், ஜெயந்தி நகரில் தனது தாயாரால் எழுதி வைக்கப்பட்ட 3 ஆயிரத்து 710 சதுர அடி நிலத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை, வருவாய் துறை ஆவணங்களுடன் சரிபார்த்து அறிக்கை அளிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வருவாய்த்துறை தப்பில் அரசு வழக்கறிஞர் சி.ஜெயப்பிரகாஷ் ஆஜராகி, வருவாய்த்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில், மனுதாரர் குறிப்பிட்ட சொத்து குறித்த ஆவணங்களில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இந்த நிலத்திற்கும், மனுதாரருக்கும் எந்த தொடர்பும் இல்லை. மனுதாரர் குறிப்பிட்டிருந்த நிலத்தில் ஒரு பகுதி பொது சாலையாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மற்றொரு பகுதி ரெஜியா பேகம் என்பவருக்கு சொந்தமானது என்று கூறப்பட்டிருந்தது.

ஆவணங்களை பரிசீலித்த நீதிபதி, எந்த ஆவணங்களும் இல்லாமல் நிலத்தை அபகரிப்பதற்காக நீதித்துறை நடைமுறைகளை தவறாக பயன்படுத்த மனுதாரர் முயற்சித்துள்ளதால் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார். அபராத தொகையை ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு மனுதாரர் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

The post பொது பாதைக்கு பட்டா கோரிய வழக்கு மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...